சேதமான கால்வாய் கரைகள், புதர் மண்டிய தடுப்பணைகள்: முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியில் விவசாயம் பாதிப்பு: அணையை திறந்தாலும் தண்ணீர்  வருவதில்லை

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப் பெரியாறு செல்லும் நீர் வழித் தடங்களில் ஆக்கிரமிப்பு, சேதமடைந்த
Updated on
2 min read

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப் பெரியாறு செல்லும் நீர் வழித் தடங்களில் ஆக்கிரமிப்பு, சேதமடைந்த பாசனக் கால்வாய் கரைகள், பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் தடுப்பணைகள் போன்றவற்றால் பாசனத் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப் பெரியாறு நீர்வழித்தடத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. முன்பு 3 மற்றும் 2 போக சாகுபடி நடைபெற்ற இப்பகுதியில், தற்போது ஒரு போகம் விளைவதே சிரமமாக உள்ளது. நடப்பாண்டில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய முதல் போக நெல் சாகுபடி பணிகள் ஆகஸ்ட் மாதமாகியும் சரிவர தொடங்கவில்லை . 
பருவ நிலை மாறுபாடு, முல்லைப் பெரியாறு அணையில் கேரளாவின் இடையூறுகளால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி சரிந்துள்ளது என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள். இவற்றையும் மீறி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்  திறந்து விடப்படும் போது, பெரியாறு மற்றும் அதன் 18  பாசனக் கால்வாய்களில் செல்லும் தண்ணீர் பல்வேறு இடங்களில் மின்சார மோட்டார் மூலம்  திருடப்படுகிறது. மேலும், நீர்வழித்தடங்களில் உள்ள தடுப்பு அணைகள், வாய்க்கால்களில் புதர் செடிகள் மண்டி நீரோட்டம் தடுக்கப்படுகிறது. பாசனக் கால்வாய்களின் கரைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்ததை பலப்படுத்தாமலும், பராமரிக்காமலும் இருப்பதால் பாசனத் தண்ணீர் விளைநிலங்களுக்குச் செல்லாமல் வீணாகிறது.
கம்பம் -சுருளிப்பட்டி செல்லும் சாலையில் பென்னிகுக் பெரியாறு பாலத்தில் இருந்து பிரியும் பாளையம் பரவு கால்வாயில் மூன்று மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாளையம், தந்தை பெரியார், பி.டி.ஆர். கால்வாய்கள் வழியாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக சுமார் 25 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாய் கரை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கரையின் பாதை உடைந்து காணப்படுகிறது. முன்பு 12 அடி அகலம் இருந்த கரை மெல்ல மெல்ல கரைந்து தற்போது  2 அடியாக குறுகியுள்ளது. இதைத் தான் விவசாயிகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கரை எப்போது உடையுமோ என்ற அச்சத்துடன் தினமும்  இதை கடந்து செல்கின்றனர்.  
பராமரிப்பில்லாத தடுப்பணைகள்: இதே போல், லோயர்கேம்ப்பில் இருந்து வைகை அணை வரை முல்லைப் பெரியாற்றில் 15-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள்  உள்ளன. இவற்றில்  பல இடங்களில் சேதமடைந்தும், செடி, கொடிகள் மற்றும் புதர் மண்டியும் உள்ளதால் பாசன கால்வாய்களுக்கு செல்லும் நீர் அளவு குறைகிறது. 
தண்ணீர் திருட்டு: முல்லைப் பெரியாற்றின் 2 கரையோரப் பகுதிகள் மற்றும் 18 கால்வாய் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் அனுமதியின்றி மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனாலும் பாசனத்துக்குச் செல்லும் நீரின் அளவு பாதிக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு பாயும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நீர்ப்பாசன பிரிவை நிர்வாகம் செய்ய உத்தமபாளையத்தில் துணைக் கோட்டம், கம்பத்தில் உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள பொறியாளர்களிடம் இப்பகுதி விவசாயிகள் கால்வாய்கரை சேதம், புதர் மண்டிய தடுப்பணைகள், தண்ணீர் திருட்டு போன்றவைகள் குறித்து தொடர்ந்து புகார் கூறியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நல்லு கூறியது: தொட்டம்மன்துறை தடுப்பணை பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. பாளையம் பரவு கால்வாய்கரை உடைந்து சேதமடையும் நிலையில் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி தண்ணீர் திருடப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் மனுக்கள்  கொடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காதது, விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றார். 
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், இப் பிரச்னைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பதில் வந்தவுடன் விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com