பெரியகுளம்-கும்பக்கரை -கொடைக்கானல் மலைச்சாலை  பணியைத் தொடங்கினார்கள்; முடிக்கவில்லை!

பெரியகுளம் -கும்பக்கரை- கொடைக்கானல் மலைச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
2 min read


பெரியகுளம் -கும்பக்கரை- கொடைக்கானல் மலைச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் செல்வதற்கு வத்தலக்குண்டு, காட்ரோடு, பண்ணைக்காடு, பெருமாள்மலை வழியாகச்  செல்லலாம். இச் சாலை 57 கி.மீ தூரம் கொண்டது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இதையேப் பயன்படுத்தி வருகின்றனர்.  பழனி வழியாக மற்றொரு சாலை உள்ளது. பழனி, பெரும்பள்ளம், பெருமாள்மலை வழியாக செல்லும் 63 கி.மீ நீளமுள்ள இந்த மலைச் சாலையை கேரளா, கோவை, திருப்பூர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
இது தவிர,  வத்தலக்குண்டு அருகே சித்தையன்கோட்டை , தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெருமாள் மலை வழியாக சுமார் 100 கி.மீ. சுற்றிச் செல்லும் சாலை ஒன்றும் உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானலை எளிதில் சென்றடையும் வகையில் புதிய சாலை அமைக்கும் திட்டம் கடந்த 1985 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதன்படி, பெரியகுளம்-கும்பக்கரை-அடுக்கம்- பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்குச் செல்லலாம். இதன் மூலம் 46 கி.மீ தூரத்தில் கொடைக்கானலை சென்றடையலாம். தென்மாவட்டங்கள், கம்பம், குமுளி மற்றும் கேரள மக்கள் எளிதாக சென்று வர இச்சாலை வசதியாக இருக்கும். மேலும் இதன் மூலம் வத்தலக்குண்டு மலைச்சாலையில் பெருமளவு வாகன நெரிசலையும் குறைக்க இயலும்.
இந்நிலையில், இத் திட்டம் மீண்டும் தயாரிக்கப்பட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு புதிய சாலை போடப்பட்டது. ஆனால் முறையாக சாலை போடப்படாததால் மழைக் காலங்களில் சேதமடைந்தது. இதனால் இச் சாலை திறப்பதற்கு முன்பாகவே  சேதமடைந்தது. அதன் பின் சாலையை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் கடந்த 2016 இல் ரூ 21.70 கோடியில் மீண்டும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதே ஆண்டு ஏப்ரல் 14 இல் பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது.  அத்திட்டத்தில் 20 கொண்டை ஊசி வளைவுகள், தண்ணீர் வெளியேறும் ஓடைகளில் பாலம் கட்டுதல், சாலையை அகலப்படுத்தி, சாலையின் ஓரங்களில் தடுப்புச்சுவர் அமைக்க முடிவானது.  
இதைத் தொடர்ந்து, பெருமாள்மலையில் இருந்து இப் பணிகள் முதற்கட்டமாக அடுக்கம் வரை மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தன. அதன் பின் அடுக்கத்தில் இருந்து கும்பக்கரை, பெரியகுளம் வரையில் 16 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அடுக்கத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் மீதமுள்ள 6 கி.மீ தூரத்திற்கு சாலைப் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மந்த கதியில் நடைபெற்று வருகிறது. எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அடுக்கம் விவசாய சங்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி கூறியது: இச்சாலை வழியாக குறைந்த தூரத்தில், குறைந்த நேரத்தில் கொடைக்கானலை சென்றடையலாம்.  இப் பணிகள் விரைவாக முழுமையடைந்தால் இப்பகுதியில் விளையும் விளைப் பொருள்களை பெரியகுளம், தேனி சந்தைகளுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரைவாக எடுத்துச் செல்லலாம்.மேலும், வத்தலக்குண்டு  மலைச் சாலையில் டம்டம் பாறை அருகே கடந்த 7 ஆண்டுகளாக அடிக்கடி பாறைகள் உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மழைக் காலங்களில் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
சேதமடைந்த புதிய சாலை
தற்போது இச் சாலையின் ஓரங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சாலையில் அடுக்கத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் வழியில் 14 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையின் ஓரத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே சாலைப் பணிகளை தரமான முறையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com