தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்றாற்றுப் படுகைகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு வருவதால், மலைப் பகுதியில் நீர் வளம் குறைந்து மூல வைகை மற்றும் கொட்டகுடி ஆறுகள் வறண்டு காணப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வருசநாடு மற்றும் போடி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகும் அருணா, உடங்கலாறு, நொச்சி ஓடை, யானைகெஜம் ஆறு, சுண்ணாம்பு ஊற்று ஆறு, திருவாச்சி ஓடை, முருக்கோடை ஆறு, குடமுருட்டி ஆறு, கோரையூத்து ஓடை, நரிப்பட்டி ஆறு, கூவலிங்கம் ஆறு, ஊத்தாம்பாறை ஆறு நண்டலை ஆறு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சிற்றாறுகள் மூலம் மூல வைகை மற்றும் கொட்டகுடி ஆறுகள் நீர்வரத்து பெறுகிறது.
மேகமலை வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள வருசநாடு மலை மற்றும் போடி மலைப் பகுதியில் வனத் துறை மற்றும் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள வனம், பட்டா மற்றும் குத்தகை நிலங்களில் இந்த சிற்றாறுகள் செல்கின்றன. இந்தச் சிற்றாறு மற்றும் ஆற்றுப் படுகை பரப்புகள் வனப் பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டிலும், பட்டா நிலங்களில் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மலைப் பகுதியில் உற்பத்தியாகும் சிற்றாற்றுகள் மற்றும் சிற்றாற்றுப் படுகைகளில் மருது, நீர் மருது, வேங்கை, தோதகத்தி, தேக்கு, பலா, திரிபலா ஆகிய உயர்ரக மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களால் சிற்றாற்றுப் படுகைகள் எப்போதும் நீர்பிடிப்புடன் காணப்படுவதுடன், மலைப் பகுதியில் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.
தடையற்ற மரம் கடத்தல்: வருசநாடு மற்றும் போடி மலைப் பகுதியில் பட்டா மற்றும் வனத்துறை ஒப்பந்த நிலங்களுக்கு இடையே உள்ள சிற்றாற்றுப் படுகைகளில் பல்வேறு இடங்களில் உயர்ரக மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டு, டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் கடத்திச் செல்லப்படுகிறது.
பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு வழங்கும் அனுமதியை பயன்படுத்தி, இந்த மரங்கள் வனத்துறை சோதனைச் சாவடியை கடந்து கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் மரக் கடத்தலுக்கு உடந்தையாக சில இடங்களில் அனுமதியின்றி மர அறுவை ஆலை மற்றும் இழைப்பகம் செயல்பட்டு வருகின்றன. மலைப் பகுதியில் தனியார் எஸ்டேட்களுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு பாதை அமைப்பதற்காக, பல்வேறு இடங்களில் சிற்றாற்றுப் படுகைகளில் உள்ள மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுகிறது.
வனத் துறை பாராமுகம்: வனத் துறையினர், பட்டா மற்றும் குத்தகை நிலங்களுக்கு இடையே, ஆற்றுப்படுகைகளில் மரங்கள் வெட்டுவதை கண்டு கொள்ளவதில்லை என்று மலை கிராம மக்கள் கூறுகின்றனர்.
பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு அனுமதி வழங்கும் "ஹில்ஸ் ஏரியா கன்சர்வேசன் அதாரிட்டி' குழு விதிமீறல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டதற்கு, வன்பகுதியில் காட்டு மரங்கள் உள்ளிட்ட எவ்வகை மரங்களும் வெட்டப்படவில்லை என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து உறுதி செய்து வருகிறோம். வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அனுமதியின்றி மரம் வெட்டுவது குறித்து தெரிய வந்தால் அவர்களுக்கு தகவல் அளிப்போம் என்றனர்.
குறையும் நீர்வளம்: மலைப் பகுதியில் உள்ள சிற்றாற்றுப் படுகைகளில் மரங்கள் வெட்டப்படுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆறுகளின் நீர் வழித்தடம் மாறுகிறது. பல்வேறு இடங்களில் சிற்றாறு தண்ணீர் தடுக்கப்பட்டு, தனியார் எஸ்டேட்களில் தைலப்புல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. சிற்றாறு மற்றும் ஓடைகளில் மரங்கள் அழிக்கப்படுவதால், விதைப் பரவல் சுழற்சியின்றி ஆற்றங்கரையோங்களில் புதிதாக மரங்கள் மற்றும் புல் திட்டுகள் முளைப்பதில்லை.
இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் மழைப் பொழிவு இருந்தாலும், சிற்றாறுகள் மூலம் மூல வைகை மற்றும் கொட்டகுடி ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. தேனி மாவட்டத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.
இது குறித்து மாவட்ட வருவாய் துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, மலைப் பகுதியில் உள்ள பட்டா மற்றும் குத்தகை நிலங்கள் பெரும்பாலானவற்றிற்கு நான்குமால் (பவுன்ட்ரி) குறித்த ஆவணங்கள் இல்லாததால், சிற்றாறு மற்றும் ஓடைகளை நில அளவை செய்து பராமரிப்பதில் சிக்கல் உள்ளது. மலைப் பகுதியில் மரம் வெட்டுவதை கண்காணிக்கவும், தடுக்கவும் வனத்துறைக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆண்டிபட்டியைச் சேர்ந்த இரா.முத்துநாகு கூறுகையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வருவாய்த் துறை நிலங்கள், சிற்றாறு மற்றும்
நீர்நிலை பகுதிகளின் "டோபோ
ஸ்கெட்ச்', "தியோடலைட் சர்வே' ஆகியவற்றின் அடிப்படையில் மலைப் பகுதியில் உள்ள வருவாய்த் துறை நிலங்கள், சிற்றாறுகள், ஆற்றுப் படுகைகளில் உள்ள மரங்கள் ஆகியவற்றை
வருவாய்த் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மற்றும் நில அளவை செய்து வரையறுத்தால் மட்டுமே, மலைப் பகுதியில் மரங்கள், மண் வளம் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.