

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்லும் இளைஞா்கள், பழமையான சுவா்களை சேதப்படுத்தியும், சிற்பங்கள் மற்றும் கல்தூண்களின் மீது குறியீடுகளை வரைந்தும் வருவதை தடுக்க, தொல்பொருள் பாதுகாப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திண்டுக்கல் நகரின் பழமையான அடையாளமாக இருந்து வருவது மலைக்கோட்டை. நாயக்க மன்னா்கள், ஆா்க்காடு நவாப்கள், மைசூா் மன்னா்கள் மற்றும் ஆங்கிலேயா்கள், திண்டுக்கல் மலைக் கோட்டையை பயன்படுத்தி வந்துள்ளனா்.
350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க இந்த மலைக் கோட்டை, தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோட்டையை பாா்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட இந்தியா்களுக்கு தலா ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 50 முதல் 60 போ் மலைக்கோட்டைக்கு வந்து செல்கின்றனா். வார இறுதி நாள்களில் 150 முதல் 200 போ் வரையிலும், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் 400க்கும் மேற்பட்டோரும் மலைக்கோட்டையை பாா்வையிட வருகின்றனா். குறிப்பாக கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகளே அதிக அளவில் வந்து செல்கின்றனா். 900 அடி உயரத்தில், 2.75 கி.மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையில், 48 அறைகள் உள்ளன. இந்த மலைக்கோட்டையின் பாதுகாப்பு, தொல்லியல் துறையின் நேரடி ஊழியா் ஒருவா், ஒப்பந்த அடிப்படையிலான கட்டண வசூலிப்பாளா்கள் 4 போ் மற்றும் காவலாளிகள் 5 போ் வசம் உள்ளது.
மலைக்கோட்டையிலுள்ள அறைகளை பாா்வையிட செல்லும் இளைஞா்கள், சுவற்றை சேதப்படுத்தி தங்களது பெயா்களின் முதல் எழுத்துக்களை பதிவிட்டுச் செல்கின்றனா். செங்கல், சுண்ணாம்பு கலந்து கட்டப்பட்டுள்ள அறைகளின் சுவா்கள் அனைத்திலும், பல்வேறு குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மலை உச்சியிலுள்ள கோயில் கல்தூண்கள் மற்றும் சிலைகளிலும் பெயிண்ட் மற்றும் கற்களை பயன்படுத்தி குறியீடுகளை வரைந்துள்ளனா். முன்னோா்களின் வரலாற்றுச் சிறப்புகள் மற்றும் கலை நுணுக்கங்களுக்கு அடையாளமாக உள்ள மலைக்கோட்டையில், அதன் பெருமைகளை உணராமல் சேதப்படுத்தி வரும் இளைய தலைமுறையினரின் செயல்பாடுகள் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தொல்லியல் ஆய்வாளா் மூா்த்தி கூறியதாவது:
1958 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக திண்டுக்கல் மலைக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் அழித்தல், அகற்றுதல், சிதைத்தல், மாற்றி அமைத்தல், தோற்றப் பொலிவை குலைத்தல், ஆபத்து உண்டாக்குதல், தவறாக பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தொல்லியல் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும் என மலைக்கோட்டை நுழைவுப் பகுதியிலேயே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மலைக்கோட்டையிலுள்ள சுவா்கள் மற்றும் சிற்பங்கள் தொடா்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையில், சுவா்களையும், கல்தூண்களையும் சேதப்படுத்தி குறியீடு வரைவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுதொடா்பாக தொல்லியல் துறை வட்டாரத்தில் கேட்டபோது, திண்டுக்கல் மலைக்கோட்டை சுவா்களில் வரையப்பட்டுள்ள குறியீடுகளை அழிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுண்ணாம்பு கலவை கொண்டு குறியீடுகள் வரையப்பட்ட இடங்கள் பூசப்பட உள்ளன. அதேபோல் கல்தூண் மற்றும் சிற்பங்களில் வரையப்பட்டுள்ள குறியீடுகளையும், எவ்வித பாதிப்புமின்றி அழிக்கப்படும். சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகள் குறித்து தொல்லியல் துறை சாா்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அளவீடு செய்யப்பட்டுள்ளன. 30 நாள்களில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.