வாக்குச் சாவடிகளில் பிற்பகல் 3 மணிக்கு மேல் முகவர்களை மாற்றக் கூடாது: ஆட்சியர்
By DIN | Published On : 01st April 2019 05:55 AM | Last Updated : 01st April 2019 05:55 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் வாக்குச் சாடிவகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் முகவர்களை பிற்பகல் 3 மணிக்கு மேல் மாற்றுவதற்கு, வாக்குப் பதிவு அலுவலர்கள் அனுமதிக்கக் கூடாது என்று, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டத்தில், தேனி மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு பணிகளுக்கு மொத்தம் 7,373 வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு ஆண்டிபட்டி அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக்குலேஷன் பள்ளி, தேனி மேரி மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேஷன் பள்ளி, க.புதுப்பட்டி எஸ்.பி.எம்.ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளி, கம்பம் ராமஜெயம் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய 6 இடங்களில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
க.புதுப்பட்டி எஸ்.பி.எம்.ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த ஆட்சியர் கூறியது: வாக்குச் சாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முறையாக பொருத்துவதற்கு பயிற்சி பெறவேண்டும்.
வாக்குப் பதிவு விவரத்தை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப வேண்டும். வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் முகவர்களை பிற்பகல் 3 மணிக்கு மேல் மாற்றம் செய்வதற்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.
ஆய்வின்போது, மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திரநாத் சர்மா, கம்பம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.