கம்பம் அரசு மருத்துவமனை முற்றுகைப் போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 01st April 2019 05:54 AM | Last Updated : 01st April 2019 05:54 AM | அ+அ அ- |

கர்ப்பிணிக்கு தாமதமாக சிகிச்சை வழங்கியதால், பிறந்த குழந்தை ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதை அடுத்து, கம்பம் அரசு மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவித்த முஸ்லிம் அமைப்பினர், போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் கம்பமெட்டு காலனியை சேர்ந்தவர் ஜாஹீர் உசேன். இவரது மனைவி பர்ஜானா (29). நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த இவரை, மார்ச் 27 ஆம் தேதி மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அன்றிரவு பிரசவ வலியால் துடித்த பர்ஜானாவுக்கு பணியில் இருந்த மருத்துவர் போதிய சிகிச்சை அளிக்கவில்லையாம். அதையடுத்து, மார்ச் 28 ஆம் தேதி அதிகாலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைக்கு தற்போது வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி, ஞாயிற்றுக்கிழமை கம்பம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக, முஸ்லிம் யூத் லீக் அமைப்பினர் அறிவித்தனர். அதையடுத்து, கம்பம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் பொன்னரசன், சம்பந்தப்பட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
அப்போது, அவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறியதை அடுத்து, முற்றுகைப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதையொட்டி, அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.