கம்பத்தில் மேற்கு வனச் சரகர் பணியிடம் காலி: குற்ற நடவடிக்கைகள் அதிகரிப்பு
By DIN | Published On : 26th April 2019 06:30 AM | Last Updated : 26th April 2019 06:30 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பம் மேற்கு வனச்சரகர் பணியிடம் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளதால், வனப் பகுதியில் கண்காணிப்பின்றி குற்ற நடவடிக்கைகள் அதிகமாகி வருகின்றன. எனவே, புதிய வனச் சரகர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் வனச் சரகமானது கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு வனச் சரகம் மேகமலை வன உயிரினச் சரணாலய நிர்வாகத்திலும், மேற்கு வனச் சரகம் மாவட்ட வன அலுவலக நிர்வாகத்தின் கீழும் வந்தது. 6 மாதங்களுக்கு முன், மேற்கு வனச் சரகராக இருந்த காஜாமைதீன் ஓய்வுபெற்றார். அதன்பின்னர், அப்பணியிடம் நிரப்பப்படவில்லை. எனவே, அதை கூடுதல் பொறுப்பாக போடி வனச் சரகர் கவனித்து வருகிறார்.
இவர் போடியில் தங்கி பணியாற்றி வருவதால், கம்பம் மேற்கு வனச் சரகப் பகுதியில் நடைபெறும் வன விலங்குகள் வேட்டை, மரம் வெட்டுதல், காட்டுத் தீ பரவுதல் உள்ளிட்ட சமூக விரோத மற்றும் இயற்கை சேதங்களை கட்டுப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் தொய்வு ஏற்பட்டு வருகிறது. எனவே, கம்பம் மேற்கு வனச் சரகப் பகுதியில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க, புதிய வனச் சரகர் நியமிக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேற்கு வனச்சரக ஊழியர் ஒருவர் கூறியது:
வனப் பகுதியில் வனச் சரகர் தலைமையில் வனவர், வனக் காப்பாளர், வனக் காவலர், தீ தடுப்பு, வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் மூலம் ரோந்து பணிகள் நடைபெறும். மேலும், அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து மரம் வெட்டுதல், வன விலங்குகள்
வேட்டையாடுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனால், வனப் பகுதிகளுக்குள் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் வெகுவாகக் குறையும். ஆனால், வனச் சரகர் பணியிடம் காலியாக உள்ளதால், முறையான தகவல்கள் கிடைக்காமல், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் உரிய உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால், ரோந்து பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட வனத் துறை நிர்வாகம் புதிதாக வனச் சரகரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.