தேனியில் புயல் நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 26th April 2019 06:28 AM | Last Updated : 26th April 2019 06:28 AM | அ+அ அ- |

புயல் நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் பேசியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறி ஏப்ரல் 29 ஆம் தேதி புயலாக உருவெடுத்து கரையை கடக்க உள்ளது. அப்போது, புயல் காற்று மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மழை நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். பாதிப்புக்குள்ளான பகுதி மக்கள் தங்குவதற்கு ஏற்றாற்போல் அனைத்து வசதிகளையும் செய்து தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
தங்களது பகுதியில் மழை வெள்ளம் குறித்து தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளை ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்லவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல், மாணவ, மாணவியர் ஆற்றோரங்களுக்குச் செல்லாத வகையில், பள்ளிகள் மூலம் பெற்றோர்களுக்கு முன்னெச்சரிக்கையாக குறுஞ்செய்தி அனுப்பிடவேண்டும்.
மழை வெள்ளம் புகாதவாறு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் மற்றும் கால்நடைத் துறையினர் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அவசர உதவிக்கு 1077 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டி.என். ஸ்மார்ட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். பழுதடைந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்றிட, மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் எஸ். கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர். சக்திவேல், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ச. ஜெயப்ரிதா மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.