கம்பம் அருகே புடலங்காய் விலை சரிவு: சாலையில் கொட்டும் விவசாயிகள்
By DIN | Published On : 12th February 2019 07:09 AM | Last Updated : 12th February 2019 07:09 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கிராமங்களில் விளையும் புடலங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர்.
கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான காமயகவுண்டன்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர் பாளையம், சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயிகள் பந்தல்
அமைத்து திராட்சை, கோவைக்காய், பாகற்காய், புடலங்காய்,
பேசன் புரூட் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், புடலங்காய் குறுகிய கால பயிர் என்பதால், நடவு செய்த 40 நாள்களில் அறுவடைக்குத் தயாராகிறது. புடலங்காயை வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். 100 நாள்கள் வரை மட்டுமே பலன் தரக்கூடிய குறுகிய கால பயிர் என்றாலும், அதிக மகசூல் கிடைக்கிறது. இதனால், கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் சாகுபடி செய்த புடலங்காய், தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில், வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.5-க்கும் குறைவாகவே கொள்முதல் செய்கின்றனர். இதனால், அறுவடை மற்றும் கூலிக்கு கூட வருவாய் கிடைக்காததால், அறுவடை செய்யாமல் பந்தலிலேயே அழுக விட்டுவைத்துள்ளனர். சில விவசாயிகள் சாலையோரத்திலும், குப்பையிலும் கொட்டி வருகின்றனர்.