மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி: தாய், மகன் கைது
By DIN | Published On : 12th February 2019 07:11 AM | Last Updated : 12th February 2019 07:11 AM | அ+அ அ- |

போலீஸார் மீது புகார் தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்த தாய், மகனை போலீஸார் கைது செய்தனர்.
போடி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் மதுரைவீரன் மகன் ராஜா. இவர், கடந்த 2018 ஆகஸ்ட் 23-ஆம் தேதி இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், ராஜாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில், இரு சக்கர வாகன விபத்து குறித்த காவல் துறை முதல் தகவல் அறிக்கை நகலை, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் தர மறுத்தனராம். இது குறித்து புகார் தெரிவிப்பதுடன், ராஜா மற்றும் அவரது தாயார் நாகரத்தினம் ஆகிய இருவரும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர்.
அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இவர்கள் இருவரையும் கைது செய்து தேனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.