காதல் திருமணம் செய்த பெண் இறந்த வழக்கில் கணவர் கைது
By DIN | Published On : 04th January 2019 01:11 AM | Last Updated : 04th January 2019 01:11 AM | அ+அ அ- |

போடியில் காதல் திருமணம் செய்த பெண் இறந்த வழக்கில் கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் வீரையா. இவரது மகள் தமிழ்செல்வி (23). இவரும், போடியை சேர்ந்த ஜெயபால் (25) என்பவரும் காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு தமிழ்செல்வி மர்மமான முறையில் இறந்து போனார். இதுகுறித்து அவரது தந்தை வீரையா போடி நகர் காவல் நிலையத்தில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் செய்தார். இதையடுத்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு
செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்ட ஆட்சியர் வைத்தியநாதன், போடி டி.எஸ்.பி. ஈஸ்வரன் ஆகியோர் தனித்தனியே விசாரணை செய்தனர்.
இதில் தமிழ்செல்வி 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இறப்பதற்கு முன் ஜெயபாலுடன் நடந்த குடும்பச் சண்டையில் தமிழ்செல்வியை ஜெயபால் தள்ளி விட்டுள்ளார். இதில் தலையில் அடிபட்டுள்ளது. அந்த அதிர்ச்சியில் அவர் இறந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜெயபால் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் பரிந்துரை செய்தார். அதன் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீஸார் ஜெயபாலை கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...