ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளைகள், மாடுபிடி வீரர்கள்: ஆண்டிபட்டி பகுதியில் தீவிர பயிற்சி
By DIN | Published On : 04th January 2019 01:10 AM | Last Updated : 04th January 2019 01:10 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள திம்மரசநாயக்கனூர் கிராம மக்கள் தங்களது ஜல்லிகட்டு காளைகளுக்கு தீவிரமாகப் பயிற்சியளித்து வருகின்றனர்.
காளைகளின் கொம்புகளை கூர்மைப்படுத்தும் பணிகள், அவற்றுக்கு வர்ணம் தீட்டுதல், கால்களுக்கு லாடம் அடித்தல் ஆகிய பணிகளோடு கொம்புகளால் மணலில் குத்துவது, மாடுபிடி வீரர்களை எதிர்கொள்ளுதல், நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளில் காளைகளைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள பல்லவராயன்பட்டி, அய்யன்பட்டி ஆகிய இடங்களிலும் மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாடுகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. காளைகளோடு சேர்ந்து மாடுபிடி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிரமாக பயிற்சியளித்து வருவதாக காளைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.