திண்டுக்கல் அருகே 17 ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
By DIN | Published On : 03rd July 2019 08:13 AM | Last Updated : 03rd July 2019 08:13 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பகுதியில் பன்றி குத்திப்பட்டான் என்ற நடுகல் ஒன்றை போடி கல்லூரி வரலாற்றுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வர் டி.ராஜகுமாரன் வழிகாட்டுதலின்படி அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் சி.மாணிக்கராஜ், ஜி.கருப்பசாமி மற்றும் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கருப்பையா, ஆய்வு மாணவர் ராம்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரம் கிராமத்தின் மேற்கே மலை பகுதியில் தொல்லியல் சார்ந்த கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றி குத்திப்பட்டான் என அழைக்கப்படும் நடுகல் அல்லது வீரக்கல் கண்டறியப்பட்டது.
இந்த நடுகல் குறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ் கூறியது:
பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும், மலையும், மலை சார்ந்த இடமாக இருந்தது. அவ்வாறு வாழ்ந்த மக்கள் உணவுக்காக காட்டு விலங்குகளை வேட்டையாடும்போது, அவற்றுடன் சண்டையிட்டு இறப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளில் வீரமரணம் அடையும் வீரர்களின் நினைவாக கல் நட்டு அவர்களை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் சிறப்பான பண்பாட்டு மரபாகும் என்பதை இலக்கியங்களும், கல்வெட்டுச் சான்றுகளும் வெளிக்காட்டுகின்றன.
இதன்படி, சித்தையன்கோட்டை அருகே பிணக்காடு என்றும், புணல்காடு என்றும், கோம்பைக்காடு என்றும் அழைக்கப்படும் மலை அடிவாரப் பகுதியில் பன்றியுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த வீரனுக்காகவும், அவருடன் இருந்த நாய்க்காகவும் 4 அடி உயரம் இரண்டரை அடி அகலமுடைய பலகைக் கல்லில் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நடுகல் கி.பி.17 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நடுகல் அமைப்பு: வீரனின் வலது கையில் உள்ள குறுவாளால் தன்னை தாக்க வரும் காட்டுப் பன்றியின் முதுகில் குத்தியபடியும், இடது கையில் துப்பாக்கியை பிடித்த நிலையிலும் காணப்படுகிறது. வீரனின் வேட்டை நாய் ஒன்று பன்றியின் முதுகில் அமர்ந்து கடிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரர்களுக்கு பொதுவாகக் கட்டப்படும் மரவுரி ஆடை இவ்வீரனுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் இவ்வீரன் காட்டுப் பன்றிகளிடமிருந்து விளை நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் பன்றியுடன் சண்டையிட்டு மரணமடைந்திருக்கலாம் அல்லது வேட்டையாடும் போது காட்டுப் பன்றியுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்திருக்கலாம்.
வீரமரணம் அடைந்தவர்கள் சொர்க்கலோகம் சென்றடைவார்கள் என்ற தமிழர்களின் பண்பாட்டு மரபுப்படி இவ்வீரனும் வீரசொர்க்கம் அடைந்ததை காட்டும் விதமாக நடுகல்லின் மேல் பகுதியில் சூரியன், பிறைநிலவு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நடுகல் வீரனை இப்பகுதி மக்கள் பச்சிமூப்பன் என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகின்றனர். பண்டைய காலம் முதல் தமிழர்கள் வீரர்களை போற்றி தெய்வமாக வணங்கும் செயலுக்கு இந்நடுகல்லும் ஒரு சான்றாக உள்ளது என்றார் மாணிக்கராஜ்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...