மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணம் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 03rd July 2019 08:12 AM | Last Updated : 03rd July 2019 08:12 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் பெற விரும்புவோர் உரிய சான்றிதழ்களுடன் ஜூலை 12 ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் தசைச் சிதைவு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, நடப்பதில் சிரமம் உள்ள 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ரோலேட்டர், இரு கால்களும் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், காது கேளாத, வாய் பேசாத, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன நலன் குன்றிய 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளியின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், செவித் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் மற்றும் சுய தொழில்புரிவோருக்கு நவீன காதொலி கருவி ஆகிய உதவி உபரணங்கள் வழங்கப்படுகிறது.
உதவி உபரணங்கள் பெறுவதற்கு தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிவற்றின் நகல்கள், கல்வி நிறுவனம், பணிபுரியும் நிறுவனம் வழங்கிய சான்று, சுய தொழில்புரிவதற்கான சான்று, 2 மார்ப்பளவு புகைப்படம் ஆகிவற்றுடன் ஜூலை 12-ம் தேதிக்குள் தேனியில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமோ விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.