ஆற்றின் கரையை உடைத்து தண்ணீர் திருட முயற்சி: 2 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 15th July 2019 07:38 AM | Last Updated : 15th July 2019 07:38 AM | அ+அ அ- |

வைகை அணை அருகே சக்கரைப்பட்டியில் வைகை ஆற்றின் கரையை உடைத்து தண்ணீர் திருட முயன்றதாக இருவர் மீது சனிக்கிழமை இரவு அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
பொதுப்பணித்துறை, வைகை அணை உள்கோட்ட இடது கரை பிரிவில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஆனந்தன். வைகை அணை அருகே சக்கரைப்பட்டி பகுதியில் சிலர் தங்களது தோட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் வைகை ஆற்றின் கரையை உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆனந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அங்கு சென்று பார்த்த போது சக்கரைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள், செல்வம் உள்ளிட்ட சிலர் வைகை ஆற்றின் கரையை உடைத்து தண்ணீர் திருடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும், பொதுப் பணித்துறை அலுவலர்களை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பெருமாள், செல்லம் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.