அரசு கள்ளர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th June 2019 02:48 AM | Last Updated : 09th June 2019 02:48 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் அரசு கள்ளர் சீரமைப்புத் துறை விடுதிகளில் தங்கிப் படிக்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 14 இடங்களிலும், மாணவிகளுக்கு 8 இடங்களிலும், கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு ஒரு இடத்திலும் அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் தங்கிப் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாணவர்களின் இருப்பிடத்திற்கும் கல்வி நிறுவனத்திற்கும் 8 கி.மீ., தூரத்திற்கும் மேல் இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மதுரையில் உள்ள கள்ளர் சீரமைத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
வருமானம் மற்றும் ஜாதிச் சான்றிதழை விடுதி சேர்க்கையின்போது சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.