உத்தமபாளையம் வட்டாரத்தில் அரசுப் பள்ளிகள் அருகே தரமற்ற பொருள்கள் விற்பனை: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th June 2019 07:13 AM | Last Updated : 14th June 2019 07:13 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட மற்றும் சுகாதாரமற்ற கலப்பட பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்வதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உத்தமபாளையம் வட்டாரத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. பள்ளி இயங்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ய தடை அமலில் உள்ளது. அதே போல, உணவுப் பொருள் வியாபாரிகள் உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யாமல் தரமான பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் காலாவதியான திண்பண்டங்கள், கலப்படம் செய்யப்பட்ட பொருள்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதை அறியாத மாணவ, மாணவிகள் தரமற்ற பொருள்களை வாங்கி சாப்பிடுவதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். மேலும் மழைக்காலம் என்பதால் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியது: உத்தமபாளையம் கிராமச்சாவடியில் இயங்கும் அரசு நடுநிலைப்பள்ளிகளை சுற்றி தற்காலிக கடைகளும் நிரந்தர கடைகளும் இயங்கி வருகின்றன.
இக்கடைகளில் அழுகிய பழங்கள், காலாவதியான உணவுப்பொருள்களை அதிகளவில் விற்பனை செய்கின்றனர். எனவே, உணவு பாதுகாப்பு அலுலர்கள், பள்ளிகளுக்கு அருகே செயல்பட்டுவரும் கடைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தரமான பொருள்களை மட்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்