தேனி மாவட்டத்தில் ரூ.280.50 கோடி மதிப்பில் புறவழிச் சாலை திட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.280.50 கோடி மதிப்பில் 43.122 கி.மீ., புற வழிச் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.280.50 கோடி மதிப்பில் 43.122 கி.மீ., புற வழிச் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
 தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லையில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. இப் பகுதிகளில் புற வழிச் சாலைகள் இல்லாததால் கனரக சரக்கு வாகனங்கள், பேருந்துள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நெடுஞ்சாலை வழியாகவே சென்று வர வேண்டியுள்ளது.
இதை தவிர்க்க, திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலகுண்டு பகுதியில் 6.9 கி.மீ., தேவதானப்பட்டியில் 3.37, பெரியகுளத்தில் 11.4, தேனியில் 12.55, வீரபாண்டியில் 2.4, சின்னமனூரில் 3.48, உத்தமபாளையத்தில் 4.43, கம்பத்தில் 7.62, கூடலூரில் 4.18 கி.மீ., உள்பட மொத்தம் 133.725 கி.மீ.,தூரம் புற வழிச் சாலை அமைக்கவும், ஒரு ரயில்வே மேம்பாலம், 13 பாலங்கள், 116 சிறு பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. 
இத் திட்டத்திற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில்  சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இத் திட்டத்தின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு புற வழிச் சாலை பணிகள் தொடங்கியது. இதில் வத்தலகுண்டு, தேவதானப்பட்டி, வீரபாண்டி ஆகிய இடங்களில் மொத்தம் 90.671 கி.மீ.,தூரம் வரை மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளன. திட்டமிட்டபடி கடந்த 2013-ம் ஆண்டுக்குள் புற வழிச் சாலை பணிகளை முடிவடையாததால், தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்து விட்டது.
இந்த நிலையில்,  தற்போது திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்மபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய இடங்களில் புற வழிச் சாலையாக மொத்தம் 43.122 கி.மீ.,தூரம், இரு வழிச் சாலை அமைக்க அரசு ரூ.280.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 
இது குறித்து தேனி தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் முத்துடையான் கூறியது: 
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 43.122 கி.,மீ தூரம் இரு வழிச் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம், திண்டுக்கல் செயலாக்கப் பிரிவின் கண்காணிப்பில் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு முடிவடைந்ததும், புறவழிச் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com