மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம்: தேனி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
By DIN | Published On : 06th March 2019 07:25 AM | Last Updated : 06th March 2019 07:25 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானமுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள், "பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்' ஓய்வூதியத் திட்டத்தில் சேர அரசு பொதுச் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் அழைப்பு விடுத்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியது: மாவட்டத்தில் மாதம் ரூ. 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், பீடி சுருட்டும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக "பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்' என்ற ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத் திட்டத்தில் சேர விரும்பும் 18 முதல் 40 வயதுக்குள்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன், அரசு பொதுச் சேவை மையத்தில் விண்ணப்பித்து சந்தா செலுத்த வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதந்தோறும் சந்தாவாக வயதுக்கேற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். பின்னர், 60 வயதைக் கடந்ததும் அவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ. 3 ஆயிரம் நிலையான ஓய்வூதியம் வழங்கப்படும்.
இத் திட்டத்தில், தொழிலாளர்கள் செலுத்தும் சந்தா தொகைக்கு இணையாக மத்திய அரசும் அவர்களது கணக்கில் சந்தா செலுத்துகிறது. ஓய்வூதியம் பெறுவர்கள் 60 வயதைக் கடந்து இறக்க நேரிட்டால், அவரது மனைவிக்கு 50 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்தும் தொழிலாளர்கள் 60 வயதுக்கு முன்னர் இறக்க நேரிட்டால், அவரது மனைவி அல்லது கணவர் இத் திட்டத்தில் இணைந்து தொடர்ந்து சந்தா செலுத்தி ஓய்வூதியம் பெறலாம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களும் ஒய்வூதியத் திட்டத்தில் சேரலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரா. பார்த்திபன், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், மத்திய மண்டல தொழிலாளர் ஆணையர் அண்ணாதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார், வருங்கால வைப்பு நிதி அமலாக்க அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.