தேர்தல் அலுவலர்களுக்கு மார்ச் 24-இல் பயிற்சி வகுப்பு தொடக்கம்
By DIN | Published On : 22nd March 2019 07:07 AM | Last Updated : 22nd March 2019 07:07 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மார்ச் 24-ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து மொத்தம் 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ரூ.22,86,650 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், ரூ.13,84,300 திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு, 3,391 இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு, தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளத்தில் இரட்டை வாக்குரிமை உள்ள 206 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபடும் 7,000 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மார்ச் 24-ஆம் தேதி முதல் தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.
மாவட்டத்தில் வாக்குரிமை உள்ள 7,102 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...