பங்குனி உத்திர திருவிழா: போடி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
By DIN | Published On : 22nd March 2019 07:07 AM | Last Updated : 22nd March 2019 07:07 AM | அ+அ அ- |

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தினமும் சிறப்பு அபிஷேகம், சுவாமி நகர்வலம் ஆகியன நடைபெற்றன.
பங்குனி உத்திர திருவிழாவான புதன்கிழமை சுவாமிக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. சிறப்புப் பூஜைக்குப் பின்னர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, முருகனின் ஆறுபடைகள் குறித்த சொற்பொழிவும், முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலையில், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று அரோகரா முழக்கமிட்டு முருகனை தரிசித்தனர்.
அதன்பின்னர், ஸ்ரீமுருகன் கந்தசஷ்டி திருக்கல்யாண அன்னதான அறக்கட்டளை குழுவின் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. இதில், போடி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்-கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கம்பம் சுருளி வேலப்பர், கம்பராயப் பெருமாள் காசி விசுவநாதர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர், மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ முருகன் கோயில் உள்ளிட்டவற்றில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, காலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்குச் சென்றனர். கோயில்களில் முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கூடலூர் கூடல் சுந்தர வேலவர், லோயர்-கேம்ப்பிலுள்ள வழிவிடு முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...