தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேனி மக்களவை தொகுதி வேட்பு மனு பரிசீலனையின் போது, ப.ரவீந்திரநாத்குமார் தனது வேட்பு மனுவில் சொத்து விவரத்தை மறைத்து குறிப்பிட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்த தங்க.தமிழ்ச்செல்வன், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
இந்தப் புகாரை பதிவு செய்து கொள்வதாகத் தெரிவித்து, ப.ரவீந்திரநாத்குமாரின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ம.பல்லவி பல்தேவ் ஏற்றுக் கொண்டார்.
இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களிடம் தங்க.தமிழ்ச்செல்வன் கூறியது: அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், அவரது சகோதரி கவிதாபானு, சகோதரர் ஜெயபிரதீப் ஆகியோருக்கு சென்னையில் விஜயாந்த் என்ற பெயரில் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக ரூ.24 லட்சம் மதிப்பில் நிலம், ரூ.3.15 கோடி மதிப்பில் காற்றாலை மின் உற்பத்தி யூனிட் உள்ளது. இந்த சொத்து விவரத்தை ப.ரவீந்திரநாத்குமார் தனது வேட்பு மனுவில் மறைத்து குறிப்பிட்டுள்ளார் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் ம.பல்லவி பல்தேவிடம் புகார் தெரிவித்தேன்.
இந்தப் புகாரை பதிவு செய்து கொள்வதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். எனவே, எனது புகார் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.