தேனி மக்களவைத் தொகுதியில் 33 வேட்பு மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 08:29 AM | Last Updated : 28th March 2019 08:29 AM | அ+அ அ- |

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ், அமமுக சார்பில் சுயேச்சை வேட்பாளர் உள்பட மொத்தம் 33 பேரின் வேட்பு மனுக்கள் புதன்கிழமை பரிசீலனைக்குப் பின் ஏற்கப்பட்டன.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் ப.ரவீந்திநாத்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் தங்க.தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதாகிருஷ்ணன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை புதன்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மக்களவை தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள உபேந்திர சர்மா வருகையில் தாமதம் ஏற்பட்டதால், பிற்பகல் 1.30 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ம.பல்லவி பல்தேவ், தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திர சர்மா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் அதிமுக, காங்கிரஸ், அமமுக சார்பில் சுயேச்சை, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்பட மொத்தம் 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுக மாற்று வேட்பாளர், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனுக்களை மார்ச் 29-ஆம் தேதி பிற்பகல் 3 வரை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். மார்ச் 29-ஆம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...