தொகுதி அறிமுகம்:அதிமுகவுக்கு பெரிய களமாக உள்ள பெரியகுளம் தொகுதி!
By DIN | Published On : 30th March 2019 07:47 AM | Last Updated : 30th March 2019 07:47 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்டுள்ள பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி ஆரம்பத்தில் திமுக வசம் இருந்தது. அதன்பின்னர், 7 முறை வெற்றி பெற்ற அதிமுகவுக்கு பெரியகுளம் பெரிய களமாக மாறியுள்ளது.
பொதுத் தொகுதியாக இருந்த பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி, கடந்த 2008-இல் தொகுதி மறுசீரமைப்பில் தனி தொகுதியாக ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத் தொகுதியில் தேனி அல்லிநகரம் நகராட்சி, பெரியகுளம் நகராட்சி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், தாமரைக்குளம், தென்கரை, தேவதானப்பட்டி, வடுகபட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பேரூராட்சிகள் அடங்கியுள்ளன.
வாக்காளர் விவரம்: பெரியகுளம் (தனி) தொகுதியில் 1,30,354 ஆண்கள், 1,34,338 பெண்கள், 95 திருநங்கைகள் என மொத்தம் 2,64,787 வாக்காளர்கள் உள்ளனர். 115 இடங்களில் வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கட்சிகளின் வெற்றி விவரம்: மறுசீரமைப்புக்கு முந்தைய பெரியகுளம் தொகுதியில் கடந்த 1967 மற்றும் 1971-இல் நடைபெற்ற தேர்தல்களில் திமுக கைப்பற்றியது. 1977, 1980, 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. பின்னர், 1989-இல் திமுகவும், 1991-இல் அதிமுகவும், 1996-இல் திமுகவும் என இரு கட்சிகளும் மாறி மாறி வந்தன.
கடந்த 2001, 2006-இல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இத் தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் பெரியகுளம் (தனி) தொகுதியில், கடந்த 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.லாசர், 2016-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் கா.கதிர்காமு ஆகியோர் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இத்தொகுதியில் கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 4 முறை திமுகவும், 7 முறை அதிமுகவும், ஒரு முறை அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கா.கதிர்காமு தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, இத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மும்முனைப் போட்டி: பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் தற்போது அதிமுக சார்பில் மு. மயில்வேல், திமுக சார்பில் கே.எஸ். சரவணக்குமார், அமமுக சார்பில் கா. கதிர்காமு, நாம் தமிழர் கட்சி சார்பில் சோபனா, மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு உள்பட 14 போட்டியிடுகின்றனர். அதிமுக, திமுக சார்பில் புதுமுக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டாலும், அதிமுக, திமுக, அமமுக கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தொகுதி மக்கள் கோரிக்கை: அரசு சார்பில் மா மதிப்புக் கூட்டுப் பொருள் உற்பத்திக் கூடம் அமைக்க வேண்டும். பெரியகுளத்தில் புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சோத்துப்பாறை குடிநீர் திட்டத்தை பெரியகுளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். பெரியகுளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த வேண்டும். நலிவடைந்த நிலையில் உள்ள மோட்டார் வாகன கட்டமைப்புத் தொழிலை பாதுகாக்க வேண்டும். தென்கரை காவல் நிலையத்தை நகர் பகுதிக்குள் மாற்றியமைக்க வேண்டும் என்பன இத் தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும்.
2011 தேர்தல் வாக்கு விபரம்:
ஏ.லாசர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 76,687 (வெற்றி)
வி.அன்பழகன்(திமுக) - 71,046
எம்.கணபதி(பாஜக) - 3,422
2016 தேர்தல் வாக்கு விபரம்:
கா.கதிர்காமு(அதிமுக) - 90,599 (வெற்றி)
வி.அன்பழகன்(திமுக) - 76,249
ஏ.லாசர்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 13,525
கே.செல்லம்(பாஜக) - 5,015
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...