பெரியகுளம் அருகே சொக்கன்அலை மலைக்கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என மழைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 13 கி.மீ தூரத்தில் கன்னக்கரை உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ தொலைவு மலைப்பகுதியில் நடந்து சென்றால் சொக்கன்அலை மலைக்கிராமத்தை அடையலாம். இக்கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கிடையாது. நடந்து மட்டுமே செல்ல முடியும்.
இக்கிராமம் அகமலை ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அகமலை ஊராட்சி போடி வருவாய்
வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்த போதிலும் அகமலைக்கு பெரியகுளம் வழியாக மட்டுமே வாகன போக்குவரத்து வசதி உள்ளது.
சொக்கன்அலையில் பளியர் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மிளகு, காபி, பலா மற்றும் இலவம் பஞ்சு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராம குழந்தைகள் படிப்பதற்காக அப்பகுதியில் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது. போதிய மாணவர்கள் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப் பள்ளி மூடப்பட்டது.
இங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கன்னக்கரையில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப்பள்ளியில் இப்பகுதி மக்களின் குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் நடுநிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு இக் குழந்தைகள் பெரியகுளம் மற்றும் தாமரைக்குளம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. மேலும் போதிய கழிவு நீர் வாய்க்கால் வசதியும் இப்பகுதிகளில் இல்லை. இதனால் மழைக் காலங்களில் வீடுகளில் தங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள ஆற்றில் குழாய் அமைத்து அங்கிருந்து குடிநீர் எடுத்து வரப்படுகிறது. கடந்தாண்டு ஏற்பட்ட கஜா புயலால் இப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. ஆனால் தற்போது வரை அவை சீரமைக்கப்படவில்லை.
இதனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, இப்பகுதியில் குடிநீர் இல்லாமல் பல கி.மீ., தொலைவில் உள்ள ஆற்றிற்குச் சென்று தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வனவிலங்குகளுக்கு பயந்து குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பலத்த காற்று வீசும் நேரங்களில் மரங்கள் விழுந்து இக்கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இவற்றைச் சீரமைக்க 20 நாள்களுக்கு மேலாகிறது. மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) இல்லாததால் இப்பகுதிகளில் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பல முறை புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சொக்கன் அலையில் முறையான குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வாருகால் வசதி செய்து தர வேண்டும், மேலும் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் எனவும் இப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சொக்கன் அலையைச் சேர்ந்த செல்வம் கூறியது :
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி மக்கள் வனப்பகுதிகளில் குடிசையில் வாழ்ந்து வந்தோம். அரசு வீடுகள் கட்டிக் கொடுத்து மின்சாரவசதி, குடிநீர் வசதி, வழங்கியதால் இங்கு குடிவந்தோம். ஆனால் தற்போது இவை எதுவும் இன்றி வசித்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.