தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காமல் தினந்தோறும் அலைக்கழிக்கப்பதாக மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிபட்டியில், கடந்த 2002 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் பிஎஸ்சி இயற்பியல், கணிதம், பிகாம்-சிஏ, பிஏ (பொருளாதாரம்) உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 1055 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இங்கு 38 விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 28 இல் இக்கல்லூரியை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக தரம் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இதுவரை வழங்கவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தினமும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகத் தெரிவிக்கின்றனர்.
இக்கல்லூரி காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியாக இருந்த போது பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடனேயே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அரசுக் கல்லூரியாக ஆணை வந்த பின்பு நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காமல் அலைக்கழிப்பதாக மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே முன்பு செயல்பட்டு வந்த 4 பாடப் பிரிவுகளுக்கும் தலா 2 வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அரசுக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டதால் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் ஒரு வகுப்பு மட்டும் தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உடனே வழங்கவேண்டும் என்றும், கடந்த காலங்களில் செயல்பட்டது போல ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 2 வகுப்புகள் செயல்படுத்தவேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறியது: காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்தது. இதன் காரணமாக கல்லூரி முதல்வரை நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
மேலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் காமராஜர் பல்கலைக் கழக பெயரில் இருந்ததால் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இக்கல்லூரிக்கான புதிய முதல்வராக மதுரை மீனாட்சி பெண்கள் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வானதியை கூடுதல் பொறுப்பு முதல்வராக அரசு அறிவித்தது. அவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.
அவரிடம் முறையாக அரசு கல்லூரிக்கான விண்ணப்பத்திற்கு அனுமதி பெறப்பட்டு அச்சடிக்க கொடுக்கப்பட்டுள்ளது. அவை வந்த பின்னர் வரும் திங்கள்கிழமை (மே.6) முதல் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாடப்பிரிவுகளுக்கு 2 வகுப்புகள் குறித்து அரசிடம் உரிய அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.