ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் கரடிகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, திம்மரசநாயக்கனூர், பெருமாள்கோவில்பட்டி, தர்மத்துப்பட்டி, டி.புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனிடையே வனப்பகுதிகளில் மழையின்றி வறட்சியாக காணப்படுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அதுபோன்ற சமயங்களில் விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசப்படுத்தியும் சென்றுவிடுகின்றன.
குறிப்பாக காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து விளைபொருள்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல கடந்த சில மாதங்களாக அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்குள் மறைந்து இருக்கும் கரடிகள், அவ்வழியாக வருபவர்களை திடீரென தாக்கியும் வருகின்றன.
இதனால் விவசாயிகள் சொந்த தோட்டங்களுக்கு கூட செல்ல முடியவில்லை என்று கூறுகின்றனர். எனவே வனவிலங்குகள் ஊடுருவலை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணைக்கரைப்பட்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.