ஆண்டிபட்டி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொது மக்கள் அவதி
By DIN | Published On : 05th May 2019 01:29 AM | Last Updated : 05th May 2019 01:29 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் முறையான வாருகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவு நீரால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பல ஆண்டுகளாக வாருகால் வசதிகள் இன்றி காணப்படுகிறது. இதன்காரணமாக கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி வருவதால், இக் கிராமத்திற்கு அமைக்கப்படும் தார்ச்சாலை அடிக்கடி சேதமடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.சுப்புலாபுரம் கிராமத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது இப்பகுதி மக்கள் முதலில் சாக்கடை வாருகால் கட்ட வேண்டும் என்றும், அதன்பிறகு புதிய சாலை அமைக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் இக் கோரிக்கையை ஏற்காமல் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இச்சாலையிலும் வழக்கம்போல கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் புதிய தார்ச்சாலையும் விரைவில் சேதமடையும் நிலை உள்ளது.
எனவே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் வாருகால்கள் கட்டும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியது:
டி.சுப்புலாபுரத்தில் முறையான சாக்கடை வாருகால் கட்ட அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால் சாக்கடை வாருகால் கட்ட முடியவில்லை. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால் இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலையும் கழிவுநீரால் சேதமடையும் அபாயத்தில் உள்ளது என்றனர்.