தேனி தனியார் கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 05th May 2019 01:28 AM | Last Updated : 05th May 2019 01:28 AM | அ+அ அ- |

தேனியில் உள்ள தனியார் கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட நாலரை கிலோ புகையிலை பொருள்களை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனியில் பெரியகுளம் சாலை, எடமால் தெரு எதிர்புறமுள்ள பகுதியில் தனியார் விற்பனை நிறுவனத்திற்குச் சொந்தமான கிட்டங்கி உள்ளது. இக் கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனைக்கு அனுப்புவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கருணாகரன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜன்( தேனி ), ரவி(பெரியகுளம் ), சிரஞ்சீவி
(கம்பம்), மணிமாறன் (சின்னமனூர் ) ஆகியோர் வெள்ளி, சனிக்கிழமைகளில் அந்தக் கிட்டங்கியில் சோதனை நடத்தினர். இதில், கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த நாலரை கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மாதிரிகள் பாளையங்கோட்டையில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், பரிசோதனை நிலைய அறிக்கைக்குப் பின், கிட்டங்கி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தேனி வட்டார உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் கூறினார்.