வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
By DIN | Published On : 05th May 2019 01:29 AM | Last Updated : 05th May 2019 01:29 AM | அ+அ அ- |

வீரபாண்டி கௌமாரிம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 7 ஆம் தேதி தொடங்க உள்ளதால் கோயில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 7 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 7 இல் மலர் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல், மே 8 இல் முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 9 இல் புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகியன நடைபெறும். மே 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். மே 13 ஆம் தேதி தேர் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தேர் தடம் பார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 14 ஆம் தேதி ஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
5 லட்சம் பக்தர்கள் வருகை: இக் கோயில் திருவிழாவை காண்பதற்கும், அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவதற்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். கடந்த ஆண்டு 5 லட்சம் பேர் வந்தனர். 25 ஆயிரம் பக்தர்கள் ஆயிரம் கண் பானை எடுத்தும், 6,000 பக்தர்கள அக்னிச் சட்டி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மே 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 24 மணி நேரமும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அடிப்படை வசதி: வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 18 இடங்களில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட 8 இடங்களில் இலவச பொதுக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவு பணிக்கு 360 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 7 இடங்களில் இலவச வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகக் கடைகள் செயல்படுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடு: திருவிழா நடைபெறும் நாள்களில் வீரபாண்டியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொழுது போக்குத் திடல்: திருவிழாவை காண வரும் பொதுமக்களுக்காக கம்பம் சாலையில் பொழுது போக்குத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராட்சத ராட்டினங்கள் மற்றும் பொழுது போக்கு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கூடுதல் தண்ணீர் திறப்பு: திருவிழாவை முன்னிட்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திங்கள்கிழமை (மே 6 ) முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், பக்தர்கள் ஆற்றில் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...