புள்ளிமான்கோம்பையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 06:54 AM | Last Updated : 15th May 2019 06:54 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பையில் குடிநீர் தட்டுப்பாட்டைபோக்க தரைநீர்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், புள்ளிமான்கோம்பையில் ஏ.டி.காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இதேபகுதியில் தரைநீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி பயன்பாட்டிற்கு வந்த சில நாள்கள் மட்டுமே தண்ணீர் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன் பின்னர் இந்த தொட்டியில் தண்ணீர் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படவில்லை. இதன்காரணமாக இப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இதே நிலை தொடர்ந்து வருகிறது. எனவே பயன்பாடின்றி உள்ள தரைநீர்தேக்க தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.