முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் திருடப்படுவதாக புகார்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு திறந்துவிடப்படும் 100 கன அடி தண்ணீர் வரும்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு திறந்துவிடப்படும் 100 கன அடி தண்ணீர் வரும் வழியிலேயே திருடப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் தொடங்கியுள்ளதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள், கால்நடைகளின் குடிநீர் ஆதாரத்திற்காக விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் தேனி மாவட்டம் வீரபாண்டியை தாண்டுவதில்லை. 
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் 100 கன அடி தண்ணீரில் தேனி மாவட்டத்திற்கு குடிநீருக்காக 20 கன அடியும், இதர பயன்பாட்டுக்கு 20 கன அடி என எடுத்துக்கொண்டாலும் மீதமுள்ள 60 கன அடி தண்ணீராவது வைகை அணைக்கு செல்ல வேண்டும். ஆனால் அந்த நீரும் அணைக்கு செல்வதில்லை. 
மாறாக கம்பத்திலிருந்து, பெரியாறு செல்லும் ஆற்றுப் பாதையின் இருபுறமும், உள்ள விவசாய நில உரிமையாளர்கள் மின்சார மோட்டார்களை பொருத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய பெரியாறு பாசன வடிநீர் வட்ட பொதுப்பணித்துறையினர் பாராமுகமாக இருந்து வருகின்றனர். தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள், தங்களின் தேவை போக மீதம் உள்ள தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு விற்பனை செய்கின்றனர். சிலர் ராட்சத கிணறுகள் அமைத்து அதில் தண்ணீரை தேக்கி பல கிலோ மீட்டர் தொலைவு குழாய்கள் பதித்து, விளைநிலங்களுக்கு, கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே தேனி மாவட்ட ஆட்சியர்  ஐந்து மாவட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் ஆதாரத்தை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com