கும்பக்கரையில் அத்துமீறும் சுற்றுலாப் பயணிகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தடுக்கப்படுமா?
By DIN | Published On : 19th May 2019 07:36 AM | Last Updated : 19th May 2019 07:36 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது . இதனைக் கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் அருகே 7 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் வட்டக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர் கும்பக்கரை அருவி வழியாக வந்து, பாம்பாற்றில் கலக்கிறது. கும்பக்கரை அருவியில் ஆண்டுக்கு 10 மாதங்களுக்கு மேலாக நீர் வரத்து இருக்கும். இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
உயிர்பலி வாங்கும் கெஜம்: கும்பக்கரை அருவியில் யானை கெஜம் உள்ளிட்ட 3 கெஜங்கள் உள்ளன. அதேபோல் அருவியில் மேல் பகுதியில் அரைகிலோ மீட்டர் தூரத்தில் வழுக்குப் பாறை உள்ளது. இப்பகுதியில் குளிக்கச்செல்லும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை செய்யப்பட்டது. அருவியின் கீழ் பகுதியில் உள்ள கெஜங்கள் சிமென்டால் மூடப்பட்டன. ஆனால் அடிக்கடி ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தால் யானை கெஜம் பகுதியில் மீண்டும் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பதற்காக கும்பக்கரை சுற்றுச்சூழல் குழுவை வனத்துறையினர் உருவாக்கினர். இந்நிலையில் மதுஅருந்தி விட்டு வரும் சுற்றுலாபயணிகள் எச்சரிக்கை பலகையை தாண்டி கெஜத்தில் குளிக்க முயல்வதால் உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன் கல்லூரி மாணவர் ஒருவர் யானை கெஜத்தில் சிக்கி பலியானார். அதேபோல் கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த காவலர் மற்றும் அவரது 7 வயது மகன் இங்கு பலியானது குறிப்பிடத்தக்கது. இதனால் கும்பக்கரை அருவிப் பகுதியில் உள்ள கெஜங்களை மூட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கும்பக்கரை அருவியில் காவல்துறை சார்பில் நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தெரிவித்தது: கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலனோர் மது அருந்து விட்டு வருகின்றனர். இதனால் ஆபத்தான பகுதியில் குளித்து உயிரிழந்து வருகின்றனர். மேலும் அருவியில் தற்போது நீர்வரத்து குறைவாக உள்ளது. அருவிக்கு செல்வது குறித்து 7 கி.மீ தொலைவில் பெரியகுளம் - வத்தலக்குண்டு பிரதான சாலையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அருவிக்கு செல்ல அனுமதிப்பது குறித்து தினமும் பலகையில் எழுதி வைக்கிறோம். அருவிக்குள் அனுமதிக்கப்படாத நாள்களில்,
சுற்றுலாப் பயணிகள் அருவியை பார்க்க வேண்டும் என்று பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
விற்பனை அங்காடியாக மாறிய ஊராட்சி சோதனைச் சாவடி
கும்பக்கரை அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களுக்கு ரூ. 25 முதல் ரூ.150 வரை வசூல் செய்கின்றனர். தற்போது கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. தற்போது சோதனைச்சாவடி தனியார் மங்காய் விற்பனை செய்யும் மையமாக மாறிவிட்டது.