போடியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரம்
By DIN | Published On : 19th May 2019 03:36 AM | Last Updated : 19th May 2019 03:36 AM | அ+அ அ- |

போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் சனிக்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
போடி நகரின் மைய பகுதியில் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் 1970- ஆம் ஆண்டு பொதுமக்கள் வழங்கியநன்கொடை, தங்கம், வெள்ளி ஆகியவற்றை கொண்டு 1,970 கிராம் தங்கத்தில் சுவாமிக்கு கவசம் தயாரிக்கப்பட்டது.
தங்க கிரீடம், கை, கால், தங்க வேல் உள்ளிட்ட 7 பிரிவுகளாக அமைக்கப்பட்ட இந்த கவசம் திருவிழா மற்றும் முக்கிய விஷேச நிகழ்ச்சிகளின் போது மூலவருக்கு அணிவிக்கப்பட்டது. சிறிது காலத்திற்கு பின் வங்கி லாக்கரில் கவசம் வைக்கப்பட்டு அதன் பின் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தங்க கவசத்தை காணவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கி லாக்கரிலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்க கவசத்தை மீட்டனர்.
பின்னர் மீண்டும் தங்க கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனையடுத்து சுப்பிரமணியசுவாமிக்கு மீண்டும் தங்க கவசம் அணிவித்து பூஜை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை வைகாசி விசாகம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு
சுப்பிரமணியசுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று "அரோகரா' என முழக்கமிட்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
முன்னதாக சுவாமிக்கு மஞ்சள், பால், தேன், நெய், குங்குமம், இளநீர், பழங்கள், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
போடி நகர் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தக்கார் அண்ணாத்துரை, அர்ச்சகர் விக்னேஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.