தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வாக்குகள் 10.9 சதவீதம் குறைவு: கட்சி நிர்வாகிகள் கலக்கம்!
By DIN | Published On : 26th May 2019 12:44 AM | Last Updated : 26th May 2019 12:44 AM | அ+அ அ- |

தேனி மக்களவை தொகுதியில் கடந்த 2014 இல் நடைபெற்ற மக்களவை தேர்தலை விட 10.9 சதவீதம் குறைவாக, தற்போது நடைபெற்ற தேர்தலில் வாக்குகளை அதிமுக பெற்றிருப்பது அக் கட்சியின் நிர்வாகிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மக்களவை தொகுதிக்கு கடந்த 2014 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரா.பார்த்திபன் 5,71,254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக கட்சி சார்பில் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு 2 ஆம் இடத்தைப் பிடித்த பொன்.முத்துராமலிங்கம் 2,56,722 வாக்குகள் பெற்றிருந்தார். மதிமுக சார்பில் போட்டியிட்ட அழகுசுந்தரம் 1,34,362 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.எம்.ஆரூண் 71,432 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இத் தேர்தலில் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகுளம்(தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் திமுகவை விட அதிமுக அதிக வாக்குகள் பெற்றிருந்தது. அதிமுக வேட்பாளர் ரா.பார்த்திபன் மொத்தம் 53.11 சதவீதம் வாக்குகள் பெற்று, 3,14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேனி மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் 5,04,813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 4,28,120 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தையும், அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க.தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தையும் பிடித்தனர்.
இத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் மொத்தம் 43.2 சதவீதம் வாக்குகள் பெற்று, 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணிக்கு மொத்தம் 36.48 சதவீதம் வாக்குகளும், அமமுக விற்கு 12.28 சதவீதம் வாக்குகளும் கிடைத்துள்ளது.
அதிமுக வாக்கு வங்கி சரிவு: தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக கடந்த 2014 இல் நடைபெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 10.9 சதவீதம் குறைவாக, தற்போது நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளது. மேலும், மக்களவை தொகுதிக்குக்கு உள்பட்ட பெரியகுளம்(தனி) சட்டப் பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட, அதிமுக வேட்பாளருக்கு 6,541 வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளது.
மக்களவை தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் அமமுகவுக்கு மொத்தம் 12.28 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. அதிமுகவின் வாக்கு
வங்கி சிதறி, அனைத்து தொகுதிக
ளிலும் அமமுக சராசரியாக 25,000 வாக்குகளுக்கும் மேல் பெற்றதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள்
கருதுகின்றனர்.
நிர்வாகிகள் கலக்கம்: தேனி மாவட்டத்தில் கம்பம், போடி ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு கடந்த 2014இல் நடைபெற்ற மக்களவை தேர்தல், 2016 இல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. ஆனால், பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி கடந்த 2014 மக்களவை, 2016 சட்டப் பேரவை தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது.
அதிமுக வில் ஏற்பட்டுள்ள பிளவால் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் அக் கட்சியின் வாக்கு வங்கி சரிந்திருப்பதும், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றிருப்பதும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.