உத்தமபாளையத்தில் வாடல் நோயால் அழிந்து வரும் தென்னை மரங்கள்
By DIN | Published On : 11th September 2019 07:45 AM | Last Updated : 11th September 2019 07:45 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம், சின்னமனூரை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள வாடல் நோய் காரணமாக லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன.
கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், க.புதுப்பட்டி,கோம்பை, ராயப்பன்பட்டி என மாவட்டத்தில் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேலாக தென்னை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்களை விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வியாபாரிகள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தேங்காயின் தடிமானான பருப்பு எண்ணெய் உற்பத்தி செய்ய மிக உகந்ததாக இருப்பதால் திருப்பூர், கோவை , காங்கேயம், ஊத்துக்குழி பகுதிகளுக்கு கொப்பரை தேங்காய்களாக எண்ணெய் எடுக்க அனுப்பி வைக்கப்படுகிறது.
விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய வர்த்தக நகரங்களில் கம்பம் பள்ளத்தாக்கில் விளைவிக்கப்படும் தேங்காய்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் கேரளத்தில் ஏற்பட்ட வாடல் நோய் கம்பம் பள்ளத்தாக்கில் பரவியுள்ளது. தென் தமிழகம் முழுவதும் இந்த நோய் தென்னை மரங்களில் தொடர்ந்து பரவிவருகிறது.
இந்த நோய் தாக்கிய மரங்களின் கீற்றுகள் ஆரம்பத்தில் பழுப்பாக மாறி படிப்டியாக மரம் கருகி மொட்டை மரமாகிவிடும். அதன்படியே உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து விட்டன.
இது குறித்து விவசாயிகள் கூறியது: கம்பம் பள்ளத்தாக்கு தென்னை விவசாயத்திற்கு ஏற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கேரளத்திலிருந்து பரவிய வாடல் நோயின் தாக்கம் காரணமாக தென்னை விவசாயத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாற்று விவசாயத்தை பெரும்பான்மையான விவசாயிகள் மாறிவிட்டனர் என்றனர்.
இது குறித்து தோட்டக்கலை துறை அலுவலர் ஒருவர் கூறியது: வாடல் நோய் கேரளத்திலிருந்து தண்ணீர் மூலமாகவே பரவியது. இந்த நோயின் வீரியம் மெல்ல மெல்ல அதிகரித்து ஓராண்டுக்கு பின்னர் தான் தெரியும். ஆரம்பத்தில் மரத்தின் நடுப்பகுதியான இளம் குருத்துக்களை தாக்கும். இதனால் மகசூல் குறையும். பின்னர் மரத்தின் கீற்றுக்கள் கருகி மொட்டையாக மாறிவிடும். இந்த நோய் தாக்கிய மரங்களை மீட்டெடுக்க சில ஆண்டுகள்ஆகும். பருவமழை குறைந்ததாலும், வாடல் நோய் தாக்கம் அதிகமானதாலும் தென்னை மரங்கள் முழுமையாக கருகிவிடுகிறது என்றார்.