தேனி மாவட்டத்தில் கால்நடை பாரமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மேய்ச்சல் தரிசு நிலங்களை கையகப்படுத்தி தீவனப் புல் வளர்ப்புக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்திற்கு உள்பட்ட 99 வருவாய் கிராமங்களிலும் 1,000 ஏக்கருக்கும் மேல் கால்நடை மேய்ச்சல் தரிசு நிலங்கள் உள்ளன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இந்த மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மேய்ச்சல் தரிசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றில் வனத் துறை சார்பில், சமூகக் காடுகள் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு புதர்மண்டிக் காணப்படுகிறது.
அவற்றை பராமரிக்க கால்நடை பராமரிப்புத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை முதன்மைத் தொழிலாகக் கொண்ட தேனி மாவட்டத்தில், மேய்ச்சல் தரிசு நிலங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்றும் விவசாயிகள் கூறினர்.
மாவட்டத்தில் கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு தீவனம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள மேய்ச்சல் தரிசு நிலங்களை கையகப்படுத்தி, பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் மூலம் தீவனப் பயிர்கள் வளர்க்கவும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.