தேனியில் கட்டுப்பாட்டை தளர்த்தியதால் கரோனா அச்சம்

தேனி மாவட்ட எல்லைகளில் உள்ள கரோனா பரிசோதனைச் சாவடிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால், பொதுமக்களுக்கு கரோனா தீநுண்மி பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தேனியில் கட்டுப்பாட்டை தளர்த்தியதால் கரோனா அச்சம்

தேனி மாவட்ட எல்லைகளில் உள்ள கரோனா பரிசோதனைச் சாவடிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதால், பொதுமக்களுக்கு கரோனா தீநுண்மி பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, லோயர்கேம்ப் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பு பரிசோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் பெற்று வருவோர் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். இவர்கள் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டு பரிசோதனை முடிவு தெரிந்த பின், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வீடுகளில் 14 நாள்கள் வரை தனிமைப்படுத்துகின்றறனர்.

கடந்த சில நாள்களாக வெளி மாநிலம் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு தினமும் 200 முதல் 300 பேர் இ-பாஸ் பெற்று வருகின்றனர். இதில், வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் மட்டும் கரோனா பரிசோதனைக்குப் பின், முடிவுகள் தெரிய வரும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால்,வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டவுடன், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

பின்னர், பரிசோதனை முடிவு வந்ததும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வீடுகளிலிருந்து அழைத்து வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். கரோனா பரிசோதனை முடிவு தெரிவதில் ஏற்படும் காலதாமதம், முகாமில் அடிப்படை மற்றும் உணவு வசதி குறைபாடு ஆகிய காரணங்களால், பரிசோதனை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர்களிடம் உறுதி  மொழி பெற்று அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறறது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து வந்த 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களிலிருந்து வருவோரை மாவட்ட எல்லையில், கரோனா பரிசோதனை முடிவு தெரியாமலேயே வீடுகளுக்கு அனுப்பி வைப்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கரோனா தீநுண்மி தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரை கரோனா பரிசோதனை முடிவு உறுதி செய்த பின்பு மாவட்டத்திற்குள் அனுமதிப்பதையும், கரோனா பரிசோதனை முடிவு காலதாமதமின்றி தெரிவிக்கப்படுவதையும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு செயல்படுவதையும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com