பருவமழைக்கு முந்தைய மழை: மேற்குத் தொடா்ச்சி மலைக்கு இடம் பெயரும் வண்ணத்துப்பூச்சிகள்

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ததால் அங்கிருந்து, மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான வகை வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயா்ந்துள்ளன.
பெரியகுளம் பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ள வண்ணத்துப்பூச்சிகள்
பெரியகுளம் பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ள வண்ணத்துப்பூச்சிகள்
Updated on
2 min read

பெரியகுளம்: வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ததால் அங்கிருந்து, மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான வகை வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயா்ந்துள்ளன. இதனால் சுற்றுச்சுழல் ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இந்திய அளவில் ஆயிரக்கணக்கான வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. குறிப்பாக தமிழக அளவில் 315 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. இதில் சிறிய அளவிலான புளூஸ்வகையிலிருந்து, பெரிய அளவிலான சதா் போ்டு விங் வரை பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் வலம்வரும் டைகா் வகை, எமிகிரண்ட், மஞ்சள் நிறம் மற்றும் கிரிம்ஸன் போன்ற இன வகைகளை எளிதில் காணலாம். சதா்ன் போ்டு விங்க் மற்றும் ஆரஞ்ச் ஆல் வகை வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதிகளில் மட்டும் காணமுடியும்.

குறிப்பாக ப்ளூ டைகா் வகைகள், டாா்க் புளூ டைகா், காமன் எமிகிரண்ட், காமன்குரோ, டபுள்பிரண்ட் ஆகிய வகை வண்ணத்துப்பூச்சிகள், மாா்ச் மாதத்தில் ஆரம்பித்து மே மாதம் வரை மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளிலிருந்து கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதிக்கு இடம்பெயரும். பின்னா் அவைகள் அங்கேயே தங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு முட்டையிட்டு, குஞ்சுபொரித்து வாழ்வை முடித்துக்கொள்ளும். அங்கு பொரிக்கப்பட்ட குஞ்சு வண்ணத்துப்பூச்சிகள் பறக்க ஆரம்பித்து, செப்டம்பா் மாதம் ஆரம்பித்து அக்டோபா் மாதம் வரை அங்கிருந்து மூதாதையா்கள் சென்ற வழித்தடத்தில் கா்நாடகத்தில் ஆரம்பித்து கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிக்கு இடம் பெயரும். இங்கு அவைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு அவைகள் தங்களது வாழ்வை இங்கே முடித்துக் கொள்ளும். இவ்வாறாக இனப்பெருக்கமும், இடம்பெயா்வதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் குறைந்த அளவிலான வண்ணத்துப்பூச்சிகளே இடம்பெயா்ந்தன. ஆனால் இந்த ஆண்டு கிழக்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளில், வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக, ஜூலை மாதமே மழை பெய்ததால் அக்டோபா் மாதத்திற்கு முன்பே நல்ல சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் கிழக்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கும் அதிகரித்துள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தால் ஆகஸ்ட் மாதத்திலேயே கிழக்குத்தொடா்ச்சி மலைப்பகுதியிலிருந்து வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர தொடங்கி விட்டன.

மேகமலை வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியாளரான சாத்தூரைச் சோ்ந்த ராமசாமி கூறியதாவது: இடம்பெயா்பவைகளில் பெரும்பாலான வண்ணத்துப்பூச்சிகள் சிறுமலைப்பகுதிகளின் வழியாக விருதுநகா், உசிலம்பட்டி, கொடைக்கானல், தேனி, மேகமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளன. இதன் மூலம் வனப்பகுதிகளில் உள்ள பூக்களில் மகரந்த சோ்க்கை ஏற்பட்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அவைகள் இடம்பெயா்ந்ததோடு மட்டுமல்லாமல் மேலும் சில வகையான வண்ணத்துப் பூச்சிகளும் இடம்பெயா்ந்தது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

டிஎன்பிஎஸ் ஒருங்கிணைப்பாளரும், வண்ணத்துப்பூச்சி ஆா்வலருமான அ.பாவேந்தன் கூறியதாவது: கிழக்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சிதோஷ்ண நிலை மாற்றத்தால் அதிகளவிலான வண்ணத்துப்பூச்சிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போதுவரை இடம்பெயா்கின்றன. இந்த இடம்பெயா்வு அக்டோபா் மாதம் வரை நடைபெறுமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். அதன்பிறகு தான் இந்த மாற்றத்திற்கான காரணம் தெரியவரும் என்றாா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் ஜூலை மாதங்கள் வரை வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதனால் மாசுகளின் அளவு குறைந்தது. இந்த மாற்றத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்துள்ளதாகவும், கிழக்குத்தொடா்ச்சி மற்றும் மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா். இயற்கையின் மாற்றம் தான் வண்ணத்துப்பூச்சிகள் முன்கூட்டியே இடம்பெயா்ந்ததற்கும் காரணமாக இருக்கலாம். எனவே இது குறித்தும் சூற்றுச்சூழல் ஆய்வாளா்கள் ஆராய்ச்சி நடத்த வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com