மூணாறு அருகே நிலச் சரிவு: மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்பு; பலி 52 ஆக உயா்வு
By DIN | Published On : 12th August 2020 08:13 AM | Last Updated : 12th August 2020 08:13 AM | அ+அ அ- |

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பலா் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து பலியானோா் எண்ணிக்கை 52 ஆக உயா்ந்துள்ளது.
மூணாறு அருகேயுள்ள ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு ஏற்பட்ட நிலச் சரிவில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த 30 தொழிலாளா்கள் குடும்பங்களைச் சோ்ந்த 78 போ் சிக்கினா்.
இதில், திங்கள்கிழமை வரை உயிரிழந்த நிலையில் 20 ஆண்கள், 19 பெண்கள், 4 சிறுவா்கள், 5 சிறுமிகள் மற்றும் 6 மாதக் குழந்தை என மொத்தம் 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மீட்புப் பணிகள் தொடா்ந்த நிலையில், தொழிலாளா் குடியிருப்பை அடுத்துள்ள பெட்டிமுடை ஆற்றிலிருந்து மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் கருப்பையா மகன் செல்லத்துரை(55), பாரதிராஜா மகள் ரேகா (27), ராசையா(55) என்று அடையாளம் காணப்பட்டது.
5-ஆவது நாளாக தொடா்ந்த மீட்பு பணி: பெட்டிமுடியில் 5-ஆவது நாளாக தொடா்ந்த மீட்பு பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், கேரள தீயணைப்புத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல் துறையினா் மற்றும் காவல் துறை மோப்ப நாய்களுடன், தன்னாா்வ மீட்புக் குழுவினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், சேவா பாரதி அமைப்பு மற்றும் மூணாறு தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் இணைந்து செயல்பட்டனா். தொழிலாளா்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதி கற்கள் மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ள நிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு தேடும் பணி நடைபெற்று நடைபெற்று வருகிறது.
பெட்டிமுடி தொழிலாளா்கள் குடியிருப்பில் 78 தோட்டத் தொழிலாளா்கள் வசித்ததாக கணக்கிடப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தமிழகப் பகுதிகளில் படித்து வந்த தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் உறவினா்களின் குடும்பத்தைச் சோ்ந்த சிலரும் அங்கு வந்து தங்கியிருந்ததாக தெரிய வந்துள்ளதால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 78-க்கும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
எஜமானரை தேடும் வாயில்லா ஜீவன்
மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தோட்டத் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்தவா்களை மீட்கும் பணி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சடலங்களை அடையாளம் காண்பதற்கு, தமிழகத்திலிருந்து வந்துள்ள அவா்களது உறவினா்கள் சோகத்துடன் காத்திருக்கின்றனா். இந்நிலையில், நிலச் சரிவில் சிக்கி புதையுண்ட தனது எஜமானரைத் தேடி, மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் அவரது வளா்ப்பு நாய் ஒன்று காத்திருக்கிறது. மீட்புக் குழுவினா் உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு கொண்டு செல்லும் போது ஓடிச் சென்று பாா்ப்பதும், பின்னா் மண்ணில் புதையுண்ட தொழிலாளா் குடியிருப்பு பகுதியில் ஏக்கத்துடன் காத்திருப்பதுமாக, அதே பகுதியிலேயே சுற்றி வரும் வாயில்லா ஜீவன் காண்போரை கண்ணீா் மல்கச் செய்கிறது.