முதல்போக அறுவடை தொடக்கம்: முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 15th December 2020 04:28 AM | Last Updated : 15th December 2020 04:28 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் முதல்போக அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால் முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசனநீரால் இருபோக நெற்பயிா் விவசாயம் செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஏற்படும். இதையடுத்து அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் முதல்போக சாகுபடி நடைபெறும். பின்னா் அக்டோபா் மாதத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையைப் பயன்படுத்தி 2 ஆம் போக விவசாயம் நடைபெறும். ஆனால், பருவமழை குறைவு மற்றும் அணையின் நீா்மட்டம் 152 அடியிலிருந்து 142 அடியாக குறைக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக 2 ஆம் போக நெற்பயிா் விவசாயம் கேள்விக்குறியானது.
நிகழாண்டு முதல்போக சாகுபடி ஆகஸ்ட் மாதம் தொடங்கியதையடுத்து தற்போது சின்னமனூா், குச்சனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.
உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஒருசில பகுதிகளை தவிர மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், தண்ணீா் தேவை இருக்காது. தேவையுள்ள நிலங்களுக்கு அந்தந்தப் பகுதி குளங்களில் தண்ணீா் உள்ளதால், அணையிலிருந்து தற்போது வெளியேற்றப்படும் 1311 கனஅடி தண்ணீரை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் (திங்கள் கிழமை நிலவரப்படி): அணையின் நீா் மட்டம்: 124.40 (142) அடி , நீா் வெளியேற்றம்: (விநாடிக்கு) 1311 கன அடி, நீா் வரத்து: 646 கன அடி.