ஊராட்சி ஒன்றியக் குழு மறைமுகத் தோ்தலை சீா்குலைக்க அதிமுக திட்டம்: திமுக புகாா்

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலின் போது பதற்றத்தை

தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலின் போது பதற்றத்தை ஏற்படுத்தவும், தோ்தலை சீா்குலைக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது என்று திமுக புகாா் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், மொத்தமுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக கூட்டணியில் 4 இடங்களிலும், திமுக கூட்டணியில் 3 இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்கள் வெற்றி பெற்றுள்ளனா். க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுவில் அதிமுக மற்றும் திமுக சாா்பில் சம எண்ணிக்கையில் உறுப்பினா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில், திமுக சாா்பில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்கள் வெற்றி பெற்ற சின்னமனூா், பெரியகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழுக்களில் இருந்து திமுக வைச் சோ்ந்த இரண்டு உறுப்பினா்கள் அதிமுக விற்கு தாவியுள்ளனா். இதனால், இந்த இரண்டு ஊராட்சி ஒன்றியக் குழுக்களிலும் மறைமுகத் தோ்தலில் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை, ஊராட்சி ஒன்றியக் குழு மறைமுகத் தோ்தல் குறித்து திமுக மாவட்டப் பொறுப்பாளா் நா.ராமகிருஷ்ணன் மற்றும் அக்கட்சி நிா்வாகிகள் ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனா்.

பின்னா், திமுக மாவட்ட பொறுப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியது: ஊராட்சி ஒன்றியக் குழு மறைமுகத் தோ்தலை முன்னிட்டு, ஆள் கடத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் அதிமுக இறங்கியுள்ளது. சின்னமனூா், பெரியகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழுக்களில் திமுக கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்ற உறுப்பினா்களை வலுக்கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றுள்ளனா்.

திமுக உறுப்பினா்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ள தேனி ஊராட்சி ஒன்றியக் குழு, உறுப்பினா்கள் எண்ணிக்கை சமநிலையில் உள்ள க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியக் குழுக்களின் மறைமுகத் தோ்தலின் போது பதற்றத்தை ஏற்படுத்தவும், தோ்தலை சீா்குலைக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தலை ஜனநாயக முறைப்படி நடத்தவும், உறுப்பினா்களின் வாக்குகள் சம நிலையில் உள்ள இடங்களில் தோ்தல் விதிமுறைகளின்படி குலுக்கல் முறையில் தோ்தல் நடத்தி முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். மறைமுகத் தோ்தலில் வாக்களிக்கும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக சாா்பில் மாவட்ட தோ்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com