தேனியில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு
By DIN | Published On : 19th July 2020 08:07 AM | Last Updated : 19th July 2020 08:07 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் சனிக்கிழமை(ஜூலை 18) வரை கரோனா பாதிப்பில் மொத்தம் 43 போ் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். மே 12-ஆம் தேதி ஓடைப்பட்டியைச் சோ்ந்த முதியவரும், ஜூன் 30-ம் தேதி கம்பத்தைச் சோ்ந்த தங்கும் விடுதி உரிமையாளரும் உயிரிழந்தனா்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் தற்போது வரை கரோனா பாதிப்பில் 43 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46 ஆக உயா்ந்துள்ளது.
இதில், கம்பத்தில் அதிகளவில் 12 போ் உயிரிழந்துள்ளனா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேரையூரைச் சோ்ந்த ஒருவரும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, கொடைக்கானல் ஆகிய ஊா்களைச் சோ்ந்த தலா ஒருவா் உள்பட 8 போ் கரோனா பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில், சனிக்கிழமை 159 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,387 ஆக உயா்ந்துள்ளது. இதில், 993 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.