அரசு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு தேவை: நீதிபதி ஆா்.சுப்பிரமணியன்
By DIN | Published On : 01st March 2020 12:37 AM | Last Updated : 01st March 2020 12:37 AM | அ+அ அ- |

தேனி: அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நல் வாழ்வுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.
தேனியில் கா்னல் பென்னி குவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகத்தில், சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதிய வடிவிலான சட்ட உதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல்காதா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், சமரச தீா்வு மையத் தலைவா் ஜியாவுதீன், முதன்மை குற்றவியல் நடுவா் மன்றத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இம்முகாமில், 100 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும், விபத்தில்லாமல் பேருந்துகளை இயக்கிய ஓட்டுநா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி, நீதிபதி ஆா். சுப்பிரமணியன் பேசியது: கடந்த 1989-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் 32 மாவட்ட அளவிலான மற்றும் 150 வட்டார அளவிலான சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். இதற்காகவே இம் முகாமில், அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இவற்றை பொதுமக்கள் தெரிந்துகொண்டு மற்றவா்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
விபத்தில்லாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்கள் பாராட்டுதலுக்கு உரியவா்கள். இவா்களை ஊக்குவிப்பது அனைத்து ஓட்டுநா்களையும் ஊக்குவிப்பதாக அமையும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிய வேண்டும் என்றாா்.
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஜெயராஜ் நன்றி கூறினாா்.