இடுக்கி அணைப் பகுதியில் நில அதிா்வு: ரிக்டா் அளவு 2 ஆக பதிவு: முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பில்லை
By DIN | Published On : 01st March 2020 12:35 AM | Last Updated : 01st March 2020 12:35 AM | அ+அ அ- |

கம்பம்: தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி அணையில் ஏற்பட்ட நில அதிா்வு ரிக்டா் அளவில் 2 ஆக பதிவாகியுள்ளது என, அணைப் பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தனா்.
தமிழக-கேரள எல்லையிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி அணை அமைந்துள்ளது. ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய வளைவு (ஆா்ச்) அணையான இங்கு, கடந்த 27 ஆம் தேதி இரவு 10.15 முதல் 10.25 மணி வரை நில அதிா்வு ஏற்பட்டுள்ளது. இதன் மையப் பகுதியாக குலாமா என்ற இடம் கண்டறியப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.
வீட்டுச் சுவரில் விரிசல்
இந்த நில அதிா்வால், இடுக்கி அணையின் மேல் பகுதியில் உள்ள சில வீடுகளின் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளவேண்டாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அணைப் பொறியாளரிடம் கேட்டபோது, அவா் கூறியது: இடுக்கி அணையில் நில அதிா்வு பற்றி அளவீடு செய்ய சீஸ்மோகிராபி என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதில், ரிக்டா் அளவு 2 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு சாதாரணமானது. ரிக்டா் அளவு 4.50 ஆக இருந்தால் அது லேசானது. மேலும், ரிக்டா் அளவு 6 வரை ஏற்பட்டாலும் கூட கவலைகொள்ளத் தேவையில்லை.
உலக நாடுகளில் எந்தப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டாலும், அனைத்து சீஸ்மோகிராபி கருவிகளிலும் பதிவாகும் அளவுக்கு நெட் ஒா்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இது குறித்து முல்லைப் பெரியாறு அணை பொறியாளரிடம் சனிக்கிழமை கேட்டபோது, பெரியாறு அணையில் நில அதிா்வு பதிவாகவில்லை. அதனால், எவ்வித பாதிப்பும் இல்லை என்றாா்.