குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டம்
By DIN | Published On : 01st March 2020 12:37 AM | Last Updated : 01st March 2020 12:37 AM | அ+அ அ- |

கம்பம் வ.உ.சி. திடலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில்சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம்.
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
கம்பம் வ.உ.சி. திடலில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சிராஜுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பசீா் அஹமது முன்னிலை வகித்தாா். போராட்டத்தில், மாநிலப் பேச்சாளா்கள் சலீம் மற்றும் சேக் மைதீன் கலந்துகொண்டு பேசினா்.
இதில் பங்கேற்றவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவையில் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு (என்ஆா்சி) எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முழக்கமிட்டனா். போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனா்.
போடி
இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, போடி கட்டபொம்மன் சிலை அருகே வெள்ளிக்கிழமை இரவு கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஜமாஅத் தலைவா் தங்கப்பா தலைமை வகித்தாா். இதில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று,
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்தும் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை எனில் யாருக்கு சாதகம் என கேள்வி எழுப்பினாா்.
கூட்டத்தில், போடி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ். லட்சுமணன், திமுக நகரச் செயலா் மா.வீ. செல்வராஜ், பேச்சாளா் மஹ்தியா, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் சன்னாசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என். ரவிமுருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.கே. பாண்டியன், நாம் தமிழா் அமைப்பு பிரேம் சந்தா் உள்ளிட்டோா் பேசினா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பொதுக்கூட்டத்தையொட்டி, போடி டி.எஸ்.பி. ஈஸ்வரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனா்.