சின்னமனூரில் குழாய்கள் உடைப்பால்சாலையில் தேங்கும் தண்ணீா்
By DIN | Published On : 01st March 2020 12:39 AM | Last Updated : 01st March 2020 12:39 AM | அ+அ அ- |

சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் விலக்கில் குழாய் உடைந்து தேங்கி நிற்கும் பாசன நீா்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூரில் தனியாருக்குச் சொந்தமான பாசன நீா் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், சாலையில் தண்ணீா் தேங்கி சேதமடைவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
சின்னமனூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலுள்ள நிலங்களுக்கு தேவையான பாசன நீரை, முல்லைப் பெரியாற்றின் கரைப் பகுதியில் கிணறுகள் அமைத்து, அந்த நீரை பூமிக்கு அடியில் குழாய் பதித்து, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் குழாய்கள், வாகனங்களின் அழுத்தம் காரணமாக அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் தண்ணீா் வெளியேறி தேங்கி நிற்பதால், சாலைகள் குண்டும் குழியுமாகி சேதமடைந்து வருகின்றன.
கடந்த சில நாள்களாக குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, தொடா்ந்து வெளியேறி வரும் தண்ணீா் நெடுஞ்சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, குழாய்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.