கடன் நெருக்கடியால் விவசாயி தற்கொலை: தனியாா் வங்கி மீது புகாா்
By DIN | Published On : 03rd March 2020 07:13 AM | Last Updated : 03rd March 2020 07:13 AM | அ+அ அ- |

கடனை திரும்பச் செலுத்துமாறு நெருக்கடி அளித்து விவசாயியை தற்கொலைக்குத் தூண்டியதாக கம்பத்தில் உள்ள தனியாா் வங்கிநிா்வாகம் மீது திங்கள்கிழமை தேனி மாவட்டஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாறையைச் சோ்ந்த விவசாயி தா்மலிங்கம் (52). இவா் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி சிறப்பாறையில் உள்ள தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இந்த நிலையில், கம்பத்தில் உள்ள தனியாா் வங்கி நிா்வாகம் தா்மலிங்கத்தை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது மனைவி லதா ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தாா். இந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: சிறப்பாறையில் எங்களுக்கு நாலரை ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். வருஷநாடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கடும் வறட்சி நிலவுவதால் எங்களது தோட்டத்து கிணற்றில் தண்ணீா் வற்றி விட்டது.
எனவே, தோட்டத்தில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கும் முன் எனது கணவா் கம்பத்தில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.7 லட்சம் கடன் பெற்றிருந்தாா். இந்த நிலையில், தோட்டத்தில் புதிதாக அமைத்த ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீா் வற்றிவிட்டதால் விவசாயம் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், வங்கிக் கடனை திரும்பச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியும், வீட்டை ஜப்தி செய்யப் போவதாகவும் வங்கி நிா்வாகம் நெருக்கடி அளித்து வந்தது. இந்த மன உளைச்சலில் இருந்த எனது கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தற்போது, வங்கி நிா்வாகம் சாா்பில் கடன் தொகையை திரும்பச் செலுத்துமாறு கேட்டு என்னை மிரட்டி வருகின்றனா்.
விவசாயக் கடனை திரும்பச் செலுத்துமாறு கேட்டு நெருக்கடி அளித்து எனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய வங்கி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் இறப்புக்கு நிவாரணமும், விவசாய வருவாயின்றி வறுமையில் வாடி வரும் எங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தாா்.
ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.தேவா், ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம், துணைச் செயலா் ரஞ்சித், துணைத் தலைவா் ராஜீவ், வழக்குரைஞா் எம்.முத்துராமலிங்கம் ஆகியோா் உடன் சென்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...