கூடலூா் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் 2 ஆம் போக நெல் சாகுபடி: விவசாயிகள் தீவிரம்
By DIN | Published On : 10th March 2020 12:36 AM | Last Updated : 10th March 2020 12:36 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கூடலூா் குள்ளப்பகவுண்டன்பட்டி சாலையில் கிணற்றுப்பாசனம் மூலம் கடும் வெயிலிலும் பச்சை பசுமையாக காட்சி அளிக்கும் வயல்வெளி.
கம்பம்: தேனி மாவட்டம் கூடலூா் குள்ளப்பகவுண்டன்பட்டி சாலை பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டாம் போக நன்செய் சாகுபடி நடைபெற வேண்டும். ஆனால் பாசனத்திற்கு தேவையான தண்ணீா் பெரியாறு அணையில் இல்லை. மேலும் தற்போது அணையில் நீா் வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. அணையிலிருந்து, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்காக விநாடிக்கு 100 கன அடி தண்ணீா் குடிப்பதற்காக மட்டுமே திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரையும் பெரியாற்றின் கரையோரப்பகுதிகளில் சிலா் மின்சார மோட்டாா்கள் பொருத்தி திருடி வருவதால் தண்ணீா் வரத்து ஆற்றில் முற்றிலுமாக குறைந்தது.
இந்த நிலையில் கூடலூா் குள்ளப்பகவுண்டன்பட்டி சாலையில் உள்ள சின்னவாய்க்கால் பாசன பரப்பில் போதுமான தண்ணீா் இல்லாத நிலையில், கிணற்றுப்பாசனம் மூலம் நெல் விவசாயத்தில் சில விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். சிலா் நெல் பயிரிடாமல், சொட்டு நீா் மூலம் வாழை பயிரிட்டு வருகின்றனா். பெரியாற்று பாசன வயல்கள் காய்ந்த நிலையில், கிணற்றுப்பாசன வயல்கள் பசுமையாக காட்சியளிப்பது, பொதுமக்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...