உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம்வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 12th March 2020 11:33 PM | Last Updated : 12th March 2020 11:33 PM | அ+அ அ- |

உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்ட தீயால் வெளியேறும் புகையை கடந்து செல்லும் அரசுப் பேருந்து.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் தீ மூட்டப்படுவதால் எழும் புகைமண்டலம் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையானது, தென்தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையானது, விவசாய நிலங்கள் மற்றும் நகரங்களின் வழியாகச் செல்கிறது. இந்நிலையில், சாலையோரங்களிலுள்ள விவசாய நிலத்தில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை தீவைத்து எரிக்கின்றனா். இதனால், புகைமண்டலம் ஏற்பட்டு, எதிரெதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்துகள் ஏற்படுகின்றன.
இதேபோல், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் இயங்கி வரும் காளவசாலில் இருந்து வெளியேறும் புகையால் கண் எரிச்சல் ஏற்படுவதுடன், வாகனங்களும் தெரிவதில்லை. இதனாலும் விபத்து அபாயம் நிலவுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.